Wednesday 26 June 2013

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கைக் குறிப்பு

மூலதனம்-காரல் மார்க்ஸ்-முதல் பாகம்
Author: Tamil nesanGenre: » மூலதனம்
Rating

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5,1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானியமெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது.பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.
வாழ்க்கைக்குறிப்பு

இளம் வயதில் கார்ல் மார்க்சு
கார்ல் மார்க்சு, தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர்நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். எப்போது கார்ல் மார்க்சின் தந்தை யூதரானஹைன்றிச் மார்க்சு கிறித்தவராக மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார்[1]. இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கானமுனைவர் பட்டத்தினைப் பெற்றார்.
1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன்நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல்பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.
பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17.பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது.

கார்ல் மார்க்சின் கல்லறை


இலண்டன், ஹைகேட் இடுகாட்டில் உள்ள கார்ல் மார்க்சின் கல்லறை
இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முந்தைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.

மார்க்சின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்
1814 - மார்க்சின் மனைவி ஜெனி பிறந்தது
1818 - காரல் மார்க்சு பிறந்தது
1820 - பிரெட்ரிக் ஏங்கெல்சின் பிறப்பு
1836 - 1841-மார்க்சு கல்லூரிப் படிப்பு
1838 - மார்க்சின் தந்தை கைன்ரிக் மார்க்சு மரணம்
1842 - மார்க்சை ஆசிரியராகக் கொண்டு ரைன்லாந்து கெசட் இதழ் தோற்றம்
1843 - ரைன்லாந்து கெசட் இதழ் வெளிவருவது நின்றது. மார்க்சு - ஜெனி திருமணம். பாரிசில் குடியேற்றம்
1844 - முதல் மகள் பிறப்பு.
1845 - பாரிசிலிருந்து வெளியேற்ற உத்தரவு. பிரசல்சு வாசம். பிரசிய குடியுரிமையை மார்க்சு துறந்து விட்டார்.
1847 - சர்வதேசு சங்கத்தின் முதல், இரண்டாம் மாநாடுகள் கூடின.
1848 - பொதுவுடமை அறிக்கை வெளியானது. பாரிசு புரட்சி. பாரிசிலிருந்து கோலோன் நகரத்துக்கு வருகை. புதிய ரைன்லாந்து கெசட் என்ற புதிய இதழ் தொடக்கம்
1849 - கோலோனிலிருந்து வெளியேற்றம்.
1849 - 1883 - இங்கிலாந்தில் வாழ்ந்தார்.
1850 - இங்கிலாந்தில் சில காலம் ஓர் இதழை வெளியிட்டு வந்தார்.
1852 - பன்னாட்டுப் பொதுவுடமைச் சங்கம் கலைக்கப்பட்டது.
1864 - முதல் இன்டர்நேசனல் தோற்றம்.
1867- மூலதனம் முதல் பகுதி வெளியானது.
1872- முதல் இன்டர்நேசனல் கலைக்கப்பட்டது.
1873 - மார்க்சு உடல் நலம் குன்றினார்.
1881 - மார்க்சின் மனைவி ஜெனியின் மறைவு.
1883 - மார்க்சின் மூத்த மகள் சென்னி லொங்குவே மறைந்தார். மார்க்சும் காலமானார்.
1883 - 1894 - மூலதனம் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் வெளியாயின.
1895 - ஏங்கெல்சின் மரணம்
மூலதனம் நூல்
அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரியபுகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமானபிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.